தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் அடுத்த வருடம்தான் பூமிக்குத் திரும்புவார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா.
கடந்த ஜூன் 5-ல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நாசா சார்பில் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர்.
இந்தப் பயணம் ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தின் நம்பகத்தன்மையப் பரிசோதிக்க சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். சர்வதேச விண்வெளி மையத்தில் எட்டு நாட்கள் தங்கி ஆய்வுகளை முடித்துவிட்டு ஜூன் 13-ல் பூமிக்குத் திரும்ப அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அங்கே சென்ற பிறகு, அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டதும், விண்கலத்தில் இருந்த ராக்கெட் மோட்டர்களான 28 த்ரஸ்டர்களில் 5 த்ரஸ்டர்கள் செயலிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பிரச்சனை சரிசெய்யப்படுவதில் சிக்கல் நீடித்ததால் இவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் 80 நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இவர்கள் இருவரும் பிப்ரவரி 2025-ல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை உபயோகித்து பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது நாசா.
போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தால் ஏற்பட்ட இந்த சிக்கலால் அதற்கு நாசாவின் அங்கீகாரம் கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் போயிங் நிறுவனத்தின் 737 MAX பயணியர் விமானங்களில் பலமுறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.