
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸும், அவரது குழுவினரும் கிருஸ்துமஸ் கொண்டாடும் காணொளியை வெளியிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா.
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5-ல் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தை உபயோகித்து 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 6 மாத காலமாக அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.
தற்போது சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் ஆகியோருடன் நிக் ஹேக், டொனால்ட் பெட்டிட் உள்ளிட்ட வேறு சில விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளனர். அங்கு புவியீர்ப்பு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, காணொளி வாயிலாக சுனிதா வில்லியம்ஸ் பேசியவை பின்வருமாறு, `சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வரவேற்கிறேன், கிருஸ்துமஸ் விடுமுறைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். இங்கு இருக்கும் நாங்கள் ஏழு பேரும் இணைந்து, கொண்டாடத்தில் ஈடுபடவுள்ளோம்.
கிருஸ்துமஸைப் பொறுத்தவரை, அதற்கான கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாட்டில் ஈடுபடுவது எனக்கு மிகவும் பிடித்த செயலாகும். இங்கு முன்னேற்பாட்டைச் மேற்கொள்ளும் விதமாக அதற்காக சில பொருட்கள் எங்களிடம் உள்ளன. இது வேடிக்கையாக இருக்கும். எங்களிடம் இருந்து உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்’ என்றார்.