
9-வது முறையாக விண்வெளியில் நடந்து, ஒட்டுமொத்தமாக விண்வெளியில் அதிகநேரம் நடந்த வீராங்கனை என்கிற உலக சாதனையைப் படைத்தார் சுனிதா வில்லியம்ஸ்.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் சுமார் 5.5 மணி நேரம் விண்வெளியில் நடந்ததாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தகவல் தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறி, அதற்கு வெளியே அமைந்துள்ள ரேடியோ தொலைத்தொடர்பு அமைப்பின் சீரமைப்புப் பணிகளை இருவரும் மேற்கொண்டார்கள். அத்துடன் ஆராய்ச்சி நடத்துவதற்காக விண்வெளி நிலையத்திற்கு மேலே இருந்த மாதிரிகளை சேகரித்தார்கள்.
9-வது முறையாக தற்போது விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். குறிப்பாக 62 மணி நேரம் மற்றும் 6 நிமிடங்கள் அவர் விண்வெளியில் நடந்துள்ளார். இதன் மூலம், 60 மணி நேரம் மற்றும் 21 நிமிடங்கள் விண்வெளியில் நடந்த பெக்கி விட்சனின் சாதனையை முறியடித்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.
அத்துடன், அதிக நேரம் விண்வெளியில் நடந்த 4-வது வீரர் என்கிற சாதனையும் சுனிதா வில்லியம்ஸ் வசமானது. மேலும், மற்றொரு விண்வெளி வீரரான பட்ச் வில்மோர் 5-வது முறையாக தற்போது விண்வெளியில் நடந்துள்ளார்.
மாதக்கணக்கில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் இரு விண்வெளி வீரர்களையும் (சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர்), கூடிய விரையில் பூமிக்குத் திரும்ப அழைத்துவரும் வகையில் தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக நாசா தகவல் அளித்துள்ளது.