சூடானில் மிக மோசமான மனிதாபிமானப் பேரழிவு: ஐ.நா. எச்சரிக்கை

சூடானில் மிக மோசமான மனிதாபிமானப் பேரழிவு:  ஐ.நா. எச்சரிக்கை

சூடான் தேசம், மனிதாபிமான நெருக்கடிகளை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளதாக அல்ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது. ஏறக்குறைய ஓராண்டுகளாக நடந்துவந்த போருக்குப்பின் அங்கு நிலைமை சீரழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் குட்டி நாடான சூடானில் ஜெனரல் அப்தெல் பத்தா அல் புர்ஹான் தலைமையிலான ராணுவ படையினருக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த ஓராண்டாக சண்டை நடந்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் எந்த உதவியும் கிடைக்காததால் அங்கு பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. சூடானில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக துணை ராணுவப் படை இயங்கி வருகிறது. உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது.

சூடானில் மனிதாபிமான தேவைகளும் இடம்பெயர்ந்ததால் பட்டினியை எதிர்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வரலாற்றில் மோசமான பேரழிவை சூடான் சந்தித்து வருவதாக ஐ.நா. அலுவலகத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு குழு இயக்குநர் ஈடம் வோஸோர்னு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தார்.

எளிமையாகச் சொன்னால் சூடான் மக்களை நாம் கண்டுகொள்ளத் தவறிவிட்டோம். அந்த நாட்டு மக்கள் விரக்தியில் உள்ளனர். உள்நாட்டுச் சண்டை காரணமாக 80 லட்சத்துகும் மேலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

முன்னதாக ரமலான் மாதத்தை முன்னிட்டு உடனடியாக போர்நிறுத்தத்தை கடைபிடிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறியது. மேலும் மனிதாபிமான முறையில் உதவிகள் செய்ய இது வழிவகுக்கும் என்றும் கூறியது. ஆனால், இருதரப்பினரும் ஒத்துப் போகாததால் போர் நிறுத்தம் ஏற்படவில்லை.

சூடான் நாட்டில் 1 கோடியே 80 லட்சம் மக்கள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கிறார்கள். கடந்த ஆண்டை விடவும் ஒரு கோடி பேர் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் 7,30,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்து வரும் மாதங்களில் இதே நிலை நீடித்தால் மேலும் 50 லட்சம் பேர் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாட நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கூட்டு முயற்சி மற்றும் கூட்டு நடவடிக்கைகள் மூலமே சூடானில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியைத் தவிர்க்க முடியும் என்று ஐ.நா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in