
24 மணி நேரத்தில் வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதினை ராஜினாமா செய்யக்கோரி வங்கதேசத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெடித்த மாணவர்கள் போராட்டத்தை அடுத்து அப்போதைய பிரதமர் ஷேக் ஹசினா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு வங்கதேச அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றார் முகமது யூனுஸ்.
இந்நிலையில், முன்பு ஷேக் ஷசீனாவின் பதவியிறக்கத்தை வலியுறுத்தி வங்கதேசத்தில் போராட்டத்தை முன்னெடுத்த, பாகுபாட்டிற்கு எதிரான மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டாக்காவில் உள்ள ஷாஹீத் மினார் பகுதியில் நேற்று (அக்.22) மாலை பேரணியாக சென்றனர்.
வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதின் 24 மணி நேரத்தில் ராஜினாமா செய்ய வேண்டும், 1972-ல் இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என மாணவர் அமைப்பின் தலைவர் ஹஸ்நாட் அப்துல்லா அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து டாக்காவில் உள்ள வங்கதேச அதிபர் மாளிகையான பங்கா பவனை முற்றுகையிட மாணவர் அமைப்பினர் முயற்சி செய்தனர். ஆனால் அதிபர் மாளிகையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஆகஸ்ட் 5-ல் நாட்டை விட்டு வெளியேறும் முன்பு ஷேக் ஹசீனா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஆதாரமாக எந்த ஒரு ஆவணமும் இல்லை என உள்ளூர் பத்திரிக்கை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார் அதிபர் ஷஹாபுதின். அவரது இந்த பேட்டியால் மீண்டும் மாணவர் போராட்டம் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.