
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சண்டையை வர்த்தகத்தைக் கொண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அத்துமீறியது. மே 8 மற்றும் மே 9-ல் ஜம்மு-காஷ்மீர் மட்டுமில்லாமல் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் என மேற்கு எல்லைப் பகுதிகளிலுள்ள மாநிலங்களையும் பாகிஸ்தான் குறிவைத்தது. ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் நடத்திய பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா பெரும்பாலும் முறியடித்தது. பாகிஸ்தானுக்குப் பதிலடி தரும் விதமாக இந்தியாவும் பதில் தாக்குதலை நடத்தியது. இந்தியா நினைத்த திட்டங்கள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டதாக முப்படை அதிகாரிகள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்கள்.
மே 10 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டையை உடனடியாக நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சண்டை நிறுத்தத்தை பாகிஸ்தான் உறுதி செய்தது. இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியும் செய்தியாளர்கள் சந்திப்பில் சண்டை நிறுத்தத்தை உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படத் தயார் என டிரம்ப் அறிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தை அறிவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் யார்? இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் யார்? என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இதனிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, மே 12 இரவு 8 மணிக்கு முதன்முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். சண்டையை நிறுத்த பாகிஸ்தான் உலக நாடுகளை அணுகியதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமரின் உரைக்கு சற்று முன்னதாக அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வர்த்தகத்தைக் கொண்டு சண்டையை நிறுத்தியதாக மீண்டும் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:
"உடனடியாகப் போரை நிறுத்த என்னுடைய நிர்வாகம் சனிக்கிழமை உதவியது. இது நிரந்தரமானது என்று நினைக்கிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளன. நாங்கள் பல உதவிகளைச் செய்துள்ளோம். வர்த்தகம் மூலம் உதவியுள்ளோம். உங்களுடன் நிறைய வணிகம் செய்யவிருக்கிறோம். சண்டையை நிறுத்துங்கள், சண்டையை நிறுத்துங்கள், சண்டையை நிறுத்துங்கள் என்றோம்.
சண்டையை நிறுத்தினால் வர்த்தகம் செய்வோம். சண்டையை நிறுத்தாவிட்டால், நாங்கள் உங்களுடன் வர்த்தகம் செய்யப்போவதில்லை என்றோம். என்னைப் போல வேறு யாரும் வர்த்தகத்தைப் பயன்படுத்தியது கிடையாது. அவர்கள் உடனடியாக சண்டையை நிறுத்துவதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அணு ஆயுதச் சண்டையை நிறுத்தியுள்ளோம். மிக மோசமான அணு ஆயுதச் சண்டையாக மாறியிருக்கக்கூடும். பல லட்சம பேர் உயிரிழந்திருக்கக்கூடும். துணை அதிபர் ஜேடி வேன்ஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆற்றிய பணிக்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்" என்றார் டொனால்ட் டிரம்ப்.