மனிதர்களின் விண்வெளிப் பயண வரலாற்றில் முதல்முறையாக, விண்வெளிக்கு அழைத்துச் சென்ற வீரர்கள் இல்லாமல் காலியாக பூமிக்குத் திரும்பியுள்ளது போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம்.
கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்த நிகழ்வு மிகவும் அரிதான மற்றும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். விண்வெளிக்குச் பயணம் மேற்கொள்ள புதிய விண்கலங்களை உருவாக்குவதில் உள்ள சிக்கல்கள் இந்தப் பிரச்னையில் மூலம் தெரியவருகின்றன.
தனியார் விண்கலன்களை உபயோகித்து வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் வணிகத் திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் ஆகியோரைச் சுமந்துகொண்டு கடந்த ஜூன் 5-ல் சர்வதேச விண்வெளி மையத்துக்குப் பயணப்பட்டது போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம்.
இந்தப் பயணம் ஸ்டார்லைனர் விண்கலத்தின் நம்பகத்தன்மையைச் சோதித்துப்பார்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்ற பிறகு ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் எரிவாயு கசிவு ஏற்பட்டதும், விண்கலத்தில் இருந்த மோட்டர்களான 28 த்ரஸ்டர்களில், 5 த்ரஸ்டர்கள் செயலிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இவற்றைச் சரி செய்ய நடத்தப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் விண்வெளி வீரர்கள் இருவரும் 8 நாட்களில் பூமிக்குத் திரும்பப் போடப்பட்டிருந்த திட்டம் கைவிடப்பட்டது. இதை அடுத்து பிப்ரவரி 2025-ல் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை உபயோகித்து இவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கடந்த ஆகஸ்டில் அறிவித்தது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா.
இந்நிலையில் இன்று (செப்.07) அதிகாலை 3.34 மணி அளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து காலியாகக் கிளம்பி ஸ்டார்லைனர் விண்கலம் 6 மணி நேரம் கழித்து அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் எந்தச் சேதமும் இன்றித் தரையிறங்கியது.