பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான 'தமிழ்ப் பெண்' உமா குமரன்

உமா குமரன் கிழக்கு லண்டனில் பிறந்து, குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான 'தமிழ்ப் பெண்' உமா குமரன்
படம்: https://x.com/Uma_Kumaran
1 min read

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் பௌ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் உமா குமரன். தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

உமா குமரனின் பெற்றோர்கள் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 1980-ல் இலங்கையில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவரது பெற்றோர் பிரிட்டனில் குடியேறினார்கள். இலங்கைத் தமிழர்கள் பிரிட்டன் வர உதவியவர்களில் ஒருவர் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்.

இவரது பெற்றோர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டனில் வாழ்ந்து வருகிறார்கள். உமா குமரன் கிழக்கு லண்டனில் பிறந்தார். குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார்.

தேர்தலுக்கு முன்பு தமிழ் கார்டியனுக்கு அளித்த நேர்காணலில் பேசிய உமா குமரன், "தொழிலாளர் கட்சியின் மதிப்பீடுகள் என்பது என் ரத்தத்திலேயே இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் முதல் தொழிற்சங்க உறுப்பினர்களில் என்னுடையக் கொள்ளு தாத்தாவும் ஒருவர்" என்பதைப் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார்.

மேலும், "தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, தான் தொடர்ச்சியாக செயல்படுவேன். தமிழர்களுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வரும் நீதியைப் பெற்றுத் தர அனைத்து நிலைகளிலும் அழுத்தம் தருவேன். நீதிக்கான இந்தக் குரலில் தொழிலாளர் கட்சியும் என்னுடன் துணை நிற்கும்" என்றார் உமா குமரன்.

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எக்ஸ் தளத்தில் உமா குமரன் குறிப்பிட்டதாவது:

"ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் பௌவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியிருப்பது வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம். என் மீதும், தொழிலாளர் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. உங்களுடையப் பிரதிநிதியாகவும், குரலாகவும் என்றும் நான் இருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in