இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் தேதி அறிவிப்பு

கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சி தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்புக்கு 145 இடங்கள் கிடைத்தன
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் தேதி அறிவிப்பு
1 min read

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.

கடந்த செப்.21-ல் நடைபெற்ற 9-வது அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த செப்.23-ல் இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றார் ஜனதா விமுக்திப் பெரமுனா (ஜெ.வி.பி.) கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்க. இதைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனா தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினரும், ஜெ.வி.பி. கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான ஹரிணி அமரசூரியாவை பிரதமராக நியமித்தார் அதிபர் அநுர குமார திசாநாயக்க. இதனால் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்குப் பிறகு இலங்கையின் 3-வது பெண் பிரதமரானார் ஹரிணி அமரசூரியா.

இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் அநுர குமார திசாநாயக்க. மேலும் நவம்பர் 14-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், நவம்பர் 21-ல் புதிய நாடாளுமன்றம் கூடும் எனவும் அறிவித்தார் அதிபர் அநுர திசாநாயக்க.

கடைசியாக கடந்த 5 ஆகஸ்ட் 2020-ல் 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சி தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்புக்கு 145 இடங்கள் கிடைத்தன. இதை அடுத்து இலங்கை பிரதமராகப் பதவியேற்றார் மஹிந்த ராஜபக்சே.

ஆனால் 2022-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையின்போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்சே. அதன் பிறகு பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே 2 மாதங்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்தார். அதற்கு பிறகு தினேஷ் குணவர்தனா பிரதமராகப் பதவியேற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in