இந்தியா உள்பட 35 நாடுகளிலிருந்து இலங்கை செல்ல விசா தேவையில்லை என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து, வருமானத்தைப் பெருக்க அந்த நாட்டு அரசு முடிவெடுத்தது. இந்தியா உள்பட 7 நாடுகளிலிருந்து இலங்கை வர விசா தேவையில்லை என்ற முடிவு கடந்தாண்டு அக்டோபர் 1-ல் நடைமுறைக்கு வந்தது. மார்ச் 2024 வரை இலங்கை அரசு இதை அனுமதித்தது.
இதைத் தொடர்ந்து, இந்தியா உள்பட 35 நாடுகளிலிருந்து இலங்கை வர விசா தேவையில்லை என்ற நடைமுறைக்கு அந்த நாட்டு அமைச்சரவை கடந்த ஆகஸ்டில் ஒப்புதல் அளித்தது. இது அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஈரான், இஸ்ரேல், ஜப்பான், மலேசியா, நேபாளம், நியூசிலாந்து, ரஷ்யா, சௌதி அரேபியா, தென் கொரியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின், சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் இலங்கைக்குச் செல்லலாம். 6 மாத காலத்துக்கு விசா இல்லாமல் இலங்கையில் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்தத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.