இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: மீட்புப் பணியில் இலங்கை | Iran | Srilanka |

ஐரிஸ் டெனா கப்பலில் பயணித்தவர்களை மீட்கும் பணிகளை இலங்கை அரசு சர்வதேச விதிமுறைகளின்படி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது...
Sri Lanka Navy rescues 30 sailors from Iranian naval ship "IRIS Dena"
இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: மீட்புப் பணியில் இலங்கை
1 min read

இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பலை அமெரிக்கா நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்கியதில் படுகாயமடைந்த 32 பேரை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஐந்து நாள்களகாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் போர்ச் சூழல் காணப்படுகிறது.

ஈரானிய கப்பல் மீது தாக்குதல்

போர் தாக்குதல் தொடங்கி ஐந்தாவது நாளான இன்று, ஈரான், அமெரிக்கா இரு தரப்பும் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளன. இதனால் மேற்காசிய நாடுகள் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையில் இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா நீர்மூழ்கிக் கப்பல் மூலம் குண்டு வீசி தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

78 பேர் காயம்; 101 பேர் மாயம்

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ஐரிஸ் டெனா என்ற போர்க்கப்பல், இன்று இலங்கையின் தெற்குப் பகுதியான காலி கடற்பரப்பிற்கு வெளியே சர்வதேச கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலில் கப்பல் மூழ்கியதாகத் தெரிகிறது.இதில் கப்பலில் 180 பேர் பயணித்த நிலையில், 78 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 32 பேரை இலங்கை ராணுவம் மீட்டுள்ளது. மேலும் 101 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு நடவடிக்கை தீவிரம்

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேராத், “ஐரிஸ் டெனா கப்பலில் பயணித்தவர்களை மீட்கும் பணிகளை இலங்கை அரசு சர்வதேச விதிமுறைகளின்படி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் இது குறித்து விளக்கமளித்தபோது, ”அபாய அழைப்பின் எதிரொலியாக சர்வதேச விதிகளின் படி இந்திய பெருங்கடலில் சிக்கிய வீரர்களை மீட்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டோம். பாதிக்கப்பட்ட பகுதியில் தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளோம். தாக்குதல் நடந்த பகுதிக்கு 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் வாழும் இலங்கை மீனவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளோம்” என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Summary

Sri Lanka Navy rescues 30 sailors from Iranian naval ship "IRIS Dena"

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in