
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பிரகடனப்படுத்திய அவசரநிலை சில மணிநேரங்களில் வாபஸ் பெறப்பட்டது.
கிழக்காசிய நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில் நேற்று (டிச.3) அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. வட கொரியாவின் கம்யூனிச சக்திகளுக்கு எதிராக தேசத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அவசரநிலை பிரகடன அறிவிப்பை வெளியிடுவதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.
தொலைக்காட்சி வழியாக தென் கொரிய மக்களிடம் நேரலையில் உரையாற்றிய அதிபர் யூன் சுக் இயோல், `தாராளவாத கொள்கைகளைப் பின்பற்றும் தென் கொரியாவை வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் அவசரநிலை ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன்’ என்றார்.
எதேச்சதிகார ஆட்சி முன்பு தென் கொரியாவில் நிலவினாலும், 1980-களில் இருந்து அந்நாடு ஜனநாயக வழியில் பயணிக்கிறது. இதனால் தென் கொரிய அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேநேரம் தென் கொரிய அதிபரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் காரணங்கள் முன்வைக்கப்பட்டது.
300 இடங்களைக் கொண்ட தென் கொரிய நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை பெற்றுள்ளது அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி. சமீபத்தில் ஆளும் அரசால் தாக்கல் செய்யப்பட்ட அந்நாட்டு பட்ஜெட்டில் பெருமளவு நிதியைக் குறைத்து ஒப்புதல் அளித்தது தென் கொரிய நாடாளுமன்றம்.
எதிர்க்கட்சியின் இந்த நிதி குறைப்பு நடவடிக்கையை அப்போது கடுமையாக விமர்சித்தார் அதிபர் இயோல். குறிப்பாக போதை பொருட்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் இந்த நிதி குறைப்பு விவகாரத்தால் பாதிக்கப்படும் எனவும், மேலும் இதனால் பொதுமக்களின் பாதுகாப்பில் சமரசம் ஏற்படும் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், நாட்டில் அவசரநிலை ராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்படுவதாக நேற்று அறிவித்தார் அதிபர் இயோல். இதனை அடுத்து அதிபரின் இந்த அறிவிப்புக்கு அந்நாட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் எழுந்த அழுத்தத்தை அடுத்து அவசரநிலை பிரகடனத்தைத் திரும்பப் பெற்றது அதிபர் இயோல் தலைமையிலான அமைச்சரவை.