
ரஷ்ய அரசுக்குச் சொந்தமான யூடியூப் சேனல்களை முடக்கிய கூகுள் நிறுவனத்துக்கு உலக பொருளாதார மதிப்பை விட அதிகமான தொகையை ரஷ்ய நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது.
பிரபல காணொளி இணையதளமான யூடியூப், கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். கிட்டத்தட்ட 17 ரஷ்ய அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான யூடியூப் சேனல்களை யூடியூப் நிர்வாகம் முடக்கியதாகக் கூறப்படுகிறது. யூடியூப் நிறுவனத்தின் இந்த முடக்கத்தை எதிர்த்து ரஷ்ய நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த ரஷ்ய நீதிமன்றம், கூகுள் நிறுவனத்துக்கு 20 டெசிலியன் டாலர்கள் அபராதம் விதித்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது. 20-க்குப் பின்னால் மொத்தம் 33 பூஜ்யங்கள் (20,000,000,000,000,000,000,000,000,000,000,000) என்பதே 200 டெசிலியன் டாலர்களின் மதிப்பாகும். ஆனால் கூகுள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர்கள் மட்டுமே.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், உலக பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு 110 டிரில்லியன் டாலர்கள் மட்டுமே, அதாவது 11-க்குப் பிறகு 13 பூஜ்யங்கள். எனவே கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்ய நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இந்த அபராதத் தொகையை முன்வைத்து, சமூக வலைதளங்களில் ரஷ்ய அரசுக்கு எதிராகப் பலரும் கிண்டல் கலந்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ரஷ்யாவில் செயல்பட்டுவந்த தனியார் ராணுவ அமைப்பான வெஜ்னர் குழுமத்துக்கு சொந்தமான யூடியூப் சேனல்கள் 2020-ல் முதலில் முடக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 2022-ல் உக்ரைன் ஆக்கிரமிப்பை ரஷ்யா தொடங்கியதும், மேலும் பல ரஷ்ய அரசு மற்றும் தனியார் யூடியூப் சேனல்களை யூடியூப் நிர்வாகம் முடக்கியது.