ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சிக்கு வங்கதேசத்தில் தடை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேச அரசு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சிக்கு வங்கதேசத்தில் தடை!
1 min read

முஹமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

ஷேக் ஷசீனா தலைமையிலான வங்கதேச அரசுக்கு எதிராக கடந்தாண்டு அந்நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை ஒடுக்க ராணுவமும், காவல்துறையும் முயன்றதில் சுமார் 1,400 பேர் உயிரிழந்ததாக ஐநா சபை தகவல் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேச அரசு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவாமி லீக் தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வங்கதேசத்தில் செயல்படும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், வங்கதேசத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ், அவாமி லீக் கட்சியை அந்நாட்டின் இடைக்கால அரசு தடை செய்துள்ளது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1949-ல் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் தொடங்கப்பட்ட அவாமி லீக் கட்சி, அந்நாட்டின் விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றியது. பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடான பிறகு ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் சுமார் 3 ஆண்டுகாலம் அக்கட்சியின் ஆட்சி நடைபெற்றது.

இதை தொடர்ந்து ராணுவ ஆட்சியும், பிற கட்சிகளின் ஆட்சியும் நடைபெற்ற நிலையில், 1996-ல் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் ஆட்சியைப் பிடித்தது. 2001-ல் ஆட்சியை இழந்தாலும், 2009 முதல் 2024 வரை அக்கட்சியின் ஆட்சி வங்கதேசத்தில் நடைபெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in