
பதவி நீக்கம் செய்யப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, அவமதிப்பு வழக்கு ஒன்றில் அந்நாட்டிலுள்ள சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் (ICT) ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
டாக்கா டிரிப்யூனின் வெளியிட்ட செய்தியின்படி, ஹசீனாவுக்கான சிறை தண்டனையை, சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி எம்.டி. கோலாம் மோர்துஸா மொஸும்தர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு முடிவு செய்துள்ளது.
ஹசீனா மீதான அதே அவமதிப்பு வழக்கின் கீழ், கைபந்தா மாவட்டத்தின் கோபிந்தகஞ்சைச் சேர்ந்த ஷகில் அகந்த் புல்புலுக்கும் இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. டாக்காவைச் சேர்ந்த அரசியல் பிரமுகரான புல்புல், அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவான பங்களாதேஷ் சத்ரா லீக் (BCL) உடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
கடந்தாண்டு அக்டோபரில் ஷகில் அகந்த் புல்புலுடன் ஷேக் ஹசீனா பேசிய தொலைபேசி அழைப்பின் கசிந்த ஆடியோவை மையமாக வைத்து இந்த அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த ஆடியோவில் பதிவாகியுள்ள, ஹசீனாவுடையது என்று அடையாளம் காணப்படும் குரல், `என் மீது 227 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எனவே 227 பேரைக் கொல்ல உரிமம் பெற்றுள்ளேன்’ என்று பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனா தெரிவித்ததாக கூறப்படும் இந்த வாக்கியம் நீதிமன்ற அவமதிப்புக்கு சமம் என்று வங்கதேச இடைக்கால அரசுத் தரப்பில் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயத்தில் வாதிடப்பட்டுள்ளது. ஏனென்றால், கடந்தாண்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் எழுச்சியுடன் தொடர்புடைய போர்க்குற்ற விசாரணைகளில் ஈடுபட்டுள்ளவர்களை இத்தகைய செயல் அச்சுறுத்த முயன்றது என்று தீர்ப்பாயத்தில் கூறப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகியதற்குப் பிறகு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை.