
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர், `இஸ்ரேலுடனான போர் அபாயத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக, அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் வழங்கும் வாய்ப்பை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு’ அந்நாட்டு ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தியதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் ஸ்திரத்தன்மை ஏற்படும் வாய்ப்பு குறித்து அச்சமடைந்த சௌதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துலஜிஸ், ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமனேய்க்கு எச்சரிக்கை விடுக்க சௌதி இளவரசரும், பாதுகாப்பு அமைச்சருமான காலித் பின் சல்மானை அனுப்பியதாக டெலிகிராஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
சௌதி இளவரசருடன் கடந்த ஏப்ரல் 17-ல் தெஹ்ரான் அதிபர் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில், ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியான், ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி முகமது பகேரி மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சௌதி இளவரசர் காலித் பின் சல்மானின் ஈரான் பயணம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகினாலும், சௌதி மன்னர் விடுத்த எச்சரிக்கை குறித்து அப்போது எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும், அதற்கு ஈடாக அந்நாட்டின் மீது உள்ள பொருளாதார தடைகளை நீக்குவதற்காகவும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக, அந்த பயணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எதிர்பாராவிதமாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் உடனிருந்தார்.
டிரம்பின் அறிவிப்பை முன்வைத்து, ஈரானிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சௌதி இளவரசர், அமெரிக்க தலைவருக்கு (அதிபருக்கு) இழுபறி பேச்சுவார்த்தைகளில் பொறுமை இல்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக டெலிகிராஃபின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, இஸ்ரேலின் தாக்குதலை சந்திப்பதைவிட அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது சிறந்த முடிவாக இருக்கும் என்று அந்த பேச்சுவார்த்தையின்போது சௌதி இளவரசர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.