
சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் பரஸ்பரம் கையெழுத்தாகியுள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தானில் ஏதேனும் ஒரு நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது இரு நாடுகள் மீதான தாக்குதல் என்றே கருதப்படும்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் சௌதி அரேபியாவுக்குச் சென்றுள்ள நிலையில், இந்த ஒப்பந்தமானது கையெழுத்தாகியுள்ளது.
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மான் அழைப்பின் பெயரில் பாகிஸ்தான் பிரதமர் அந்நாட்டுக்குச் சென்றுள்ளார். இருவரும் ரியாத்திலுள்ள அல்-யமாமா அரண்மனையில் சந்தித்துக் கொண்டார்கள்.
பரஸ்பரம் கையெழுத்தாகியுள்ள இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தமானது, சவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஏறத்தாழ 80 ஆண்டுகாலமாக நீடிக்கும் வரலாற்று கூட்டாண்மையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது என்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சகோதரத்துவம், இஸ்லாமிய ஒற்றுமை, வியூக நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது இரு நாடுகளுக்கும் மீதான தாக்குதல் என்று கருதப்படும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உதாரணத்துக்கு பாகிஸ்தான் மீது ஏதேனும் நாடு தாக்குதல் நடத்தினால் அந்தத் தாக்குதல் தங்கள் மீதும் நிகழ்த்தப்பட்டதாகவே சௌதி அரேபியா கருதும்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டுள்ள நிலையில் இவ்விரு நாடுகளும் இப்படியொரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
"சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே வியூகம் சார்ந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதை அறிந்தோம். இதுகுறித்து அரவு விழிப்புணர்வுடனே இருந்தது. இரு நாடுகளுக்கிடையே பரிசீலனையில் இருந்த நீண்ட கால ஏற்பாடுகளை இது முறைப்படுத்தியுள்ளது.
நம் தேசியப் பாதுகாப்பு, அதேசமயம் பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மை கோணத்தில் இது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆராய்வோம். இந்தியாவின் தேச நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதி கொண்டுள்ளது" என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவுடனான இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி என்றால் அது இந்தியா தான். பிரதமர் நரேந்திர மோடி சில மாதங்களுக்கு முன்பு சௌதி அரேபியாவுக்குச் சென்றிருந்தபோது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை சௌதி அரேபியா கண்டித்திருந்தது. பயங்கராவத்தை நியாயப்படுத்தும் எந்தக் காரணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா மற்றும் சௌதி அரேபியா சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
Saudi Arabia | Pakistan | Defence Pact | India | External Affairs Ministry | Riyadh | Shehbaz Sharif | Mohammed bin Salman |