
ரஷ்யாவின் பல்வேறு பகுதிகள் மீது உக்ரைனின் சிறப்புப் படைகளால் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், அங்கிருக்கும் விமானத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 41 குண்டுவீச்சு விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவின் மூன்றில் ஒரு பங்கு குண்டுவீச்சு விமானங்கள் இந்த தாக்குதலால் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. Tu-95 மற்றும் Tu-22 ரக குண்டுவீச்சு விமானங்கள், A-50 வான்வழி ரேடார்கள் போன்றவை உக்ரைன் டிரோன்களால் அழிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய விமான தளங்களுக்கு அருகே உக்ரைன் கப்பல்கள் சென்றபோது, அந்த கப்பல்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட டிரோன்கள் வெளியேறி இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. உக்ரைனால் அழிக்கப்பட்ட ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் அனைத்தும், ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் போன்ற நிலையான ஆயுதங்களைப் பயன்படுத்தி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தன.
6000 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள விமானப்படை தளங்களான ஒலென்யா மற்றும் இர்குட்ஸ்க் ஆகிய இரண்டின் மீதும் உக்ரைனால் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலால், இதற்காக துல்லியமான முறையில் திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போரானது 4-ம் ஆண்டாக தொடரும் நிலையில், இத்தகைய தாக்குதலை உக்ரைன் நிகழ்த்தியுள்ளது.
உக்ரைனால் மேற்கொள்ளப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலை, `பேர்ள் ஹார்பர் தாக்குதல்’ என்று ரஷ்ய ஊடகங்கள் விவரித்துள்ளன.
1941-ல் இரண்டாம் உலகப் போரின்போது ஹவாய் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க போர் விமானங்கள் மீது ஆச்சரியப்படும் வகையில் ஜப்பான் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்குதல், `பேர்ள் ஹார்பர் தாக்குதல்’ என்று அழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா நுழைந்தது.