ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது என்று அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அதிபர் புதின், `அணு ஆயுதம் இல்லாத ஒரு நாடு, அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாட்டின் ஒத்துழைப்புடன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் அது கூட்டு தாக்குதலாகவே கருதப்படும்.
அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான எங்கள் நிபந்தனைகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எங்கள் மீது ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன்கள் ஆகியவற்றை உபயோகித்து தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் தயங்கமாட்டோம்’ என்றார்.
கடந்த பிப்ரவரி 2022-ல் தொடங்கிய உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை 32 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான பதில் தாக்குதலை தொடுக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல்களை தொடுக்க உக்ரைனுக்கு அனுமதி வழங்குவது குறித்து அமெரிக்காவும், பிரிட்டனும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதை முன்வைத்தே ரஷ்யா மீது தீவிர ஏவுகணை தாக்குதல் நடைபெற்றால் பதிலுக்கு அணு ஆயுதத் தாக்குதலில் ஈடுபட ரஷ்யா தயங்காது என்று பேசியுள்ளார் அதிபர் புதின். ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகளை அமெரிக்காவும், ஸ்டோர்ம் ஷாடோஸ் ஏவுகணை பிரிட்டனும் உக்ரைனுக்கு வழங்கியுள்ளன.
கடந்த 2020-ல் ரஷ்யாவின் அணு ஆயுதக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி எதிரி நாடால் ரஷ்யா மீது அணு ஆயுதக் தாக்குதல் நடத்தப்பட்டாலோ அல்லது ரஷ்யாவின் இருப்பை அச்சுறுத்தும் வகையில் தீவிர ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டாலோ, அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.