
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தரும் தகவலை உறுதி செய்துள்ளார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ்.
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பின் பெயரில் ஜூலை மாதத்தில் இரு நாள் அரசு முறைப் பயணமாக ரஷ்யாவுக்குச் சென்று, 22-வது இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கஸன் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்நிலையில், விரைவில் அதிபர் புதின் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளதாகவும் அது தொடர்பான தகவலை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்தாகவும், ரஷ்ய அரசின் செய்தி ஊடகமான டிஏஎஸ்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
`இந்திய அரசுத் தலைமையிடமிருந்து வந்த அழைப்பை அதிபர் புதின் ஏற்றுள்ளார். இந்த பயணத்திற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்போது இது எங்களின் முறை’ என்று ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு லாவ்ரோவ் பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதேநேரம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் வருடாவருடம் மே 9 அன்று ரஷ்ய படைகளால் வெற்றி அணிவகுப்பு நடைபெறும். வரும் மே மாதம் வழக்கம்போல நடைபெறவுள்ள இந்த அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.