
50 பேருடன் பயணித்த ரஷ்ய விமானம், சீனாவின் எல்லைக்கு அருகே அமைந்துள்ள அந்நாட்டின் தூர கிழக்குப் பகுதியில் இன்று (ஜூலை 24) விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
விமானம் பயணத்தில் இருந்தபோது அதனுடனான தொடர்பை கட்டுப்பாட்டு அறை இழந்துள்ளது. இதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு, எரிந்துகொண்டிருந்த விமானத்தின் சில பகுதிகளை மீட்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ரஷ்யாவின் அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா விமான நிலையத்தில் தரையிறங்க விமானத்தால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி தோல்வியடைந்த பிறகு, இரண்டாவது முறையாக மீண்டும் தரையிறங்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. அப்போது கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பில் இருந்து விமானம் மறைந்துவிட்டது.
தரையிறங்கும்போது, விமானத்தை இயக்கிய விமானியால் ஏற்பட்ட தவறு காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட பகுப்பாய்வில் தகவல் தெரியவந்துள்ளது.
சைபீரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்பட்ட இந்த அன்டோனோவ் ஏ.என்.24 ரக விமானம், 50 ஆண்டுகால பழமையானது என்று கூறப்படுகிறது.
மேலும், முதற்கட்ட தரவுகளின்படி, ஐந்து குழந்தைகள் உள்பட 43 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட ஆறு பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக அமூர் மாகாண ஆளுநர் வாசிலி ஓர்லோவ் தெரிவித்தார். `விமானத்தைத் தேடுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என்று ஓர்லோவ் டெலிகிராமில் பதிவிட்டார்.
இருப்பினும், அந்நாட்டின் அவசரகால அமைச்சகம், சற்று குறைவான எண்ணிக்கையை வழங்கியது, இதன்படி சுமார் 40 பேர் விமானத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.