உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட புதின் தயார்: ரஷ்ய அரசு

இறையாண்மை கொண்ட நாடு என்ற அடிப்படையில், நாங்கள் பங்குபெறாத எந்த ஒரு போர் ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட புதின் தயார்: ரஷ்ய அரசு
ANI
1 min read

தேவை ஏற்பட்டால், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தயாராக உள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது கடந்த 24 பிப்ரவரி 2022-ல் ரஷ்யா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டு காலமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தையில் மூன்றாம் நாடுகள் ஈடுபட்டுவந்தாலும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன.

குறிப்பாக, பதவிக்கு வந்த பிறகு ரஷ்ய அதிபர் புதினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும் தொலைபேசி வாயிலாக பேசினார் டொனால்ட் டிரம்ப். போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று (பிப்.18) சௌதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் வேகம் பெற்றிருந்தாலும், உக்ரைனில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.

`இறையாண்மை கொண்ட நாடு என்ற அடிப்படையில், நாங்கள் பங்குபெறாத எந்த ஒரு போர் ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், `தேவை ஏற்பட்டால், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அதிபர் புதின் தெரிவித்தார். அதேநேரம் பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்படவுள்ள ஒப்பந்தத்தின் ஷரத்துகளை சட்ட அடிப்படையில் விவாதிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in