
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியதாக வெளியான செய்தியை மறுத்துள்ளது ரஷ்ய அரசு.
கடந்த நவ.6-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தல் பரப்புரையின்போது, அமெரிக்க அதிபராகத் தான் தேர்தெடுக்கப்பட்டால் 24 மணி நேரத்தில் உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவேன் எனப் பேசியிருந்தார் டிரம்ப். ஆனால் எவ்வாறு இது செயல்படுத்தப்படும் என எந்த ஒரு திட்டத்தையும் அவர் வெளியிடவில்லை.
அதிபர் தேர்தலை வெற்றிக்காக கடந்த நவ.7-ல் டிரம்புக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த புதின், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், உக்ரைன் உடனான போரை நிறுத்துமாறு தொலைபேசி வாயிலாக புதினுடன் டிரம்ப் பேசியதாக ராய்டர்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த செய்திகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அரசின் செய்தித்தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், `இது கச்சிதமான புனைவு, அவ்வாறு எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை’ என்றார். மேலும், தரமான செய்தி ஊடகங்கள் கூட சில நேரங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிடுகின்றன எனவும் பேசியுள்ளார் பெஸ்கோவ்.
2 வருடத்தை நெருங்கியிருக்கும் உக்ரைனில் நடைபெற்றுவரும் போரில், தற்போது குறிப்பிடத்தக்க வெற்றிகளை ரஷ்யா பெற்றுவருகிறது. அத்துடன், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதற்குப் பிறகு, ஐரோப்பிய தலைவர்களிடம் நிலவும் பதட்டம் குறித்து கவனித்ததாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது ரஷ்ய அரசு.