
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய இறக்குமதிகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த ஒரு நாள் கழித்து, ரஷ்யாவிற்கு எதிரான இத்தகைய அச்சுறுத்தல்கள் சட்டவிரோதமானது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
அண்மைக் காலமாக அமெரிக்க அரசு விடுத்துவரும் அச்சுறுத்தல்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், `ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்த நாடுகளை கட்டாயப்படுத்த முயற்சிப்பது சட்டவிரோதமானது’ என்றார்.
மேலும், தங்களது வர்த்தக கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்க நாடுகளுக்கு உரிமை உண்டு என்பதால் அத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்க முடியாது என்றும், ரஷ்யாவின் வர்த்தக கூட்டாளிகளுக்கு எதிரான இத்தகைய அழுத்தங்கள் அச்சுறுத்தல்களாகவே கருதப்படும் என்றும் பெஸ்கோவ் கூறினார்.
ரஷ்யா கூறுவது என்ன?
`அச்சுறுத்தல்கள், ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்க நாடுகளை கட்டாயப்படுத்தும் முயற்சிகள், போன்ற பல கூற்றுகளை நாங்கள் கேட்டு வருகிறோம். அவற்றை நாங்கள் சட்டப்பூர்வமானவை என்று கருதவில்லை’ என்று பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், `இறையாண்மைகொண்ட நாடுகளுக்குத் தங்கள் சொந்த வர்த்தக கூட்டாளிகளையும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டாளிகளையும் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கவேண்டும். வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் வடிவங்களை தேர்வு செய்துகொள்ள ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு உரிமை இருக்கவேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்’ என்றும் அவர் கூறினார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பிற ராணுவத் தடவாளங்கள் வாங்குவதை நிறுத்தாவிட்டால், திருத்தப்பட்ட வரிகள் விதிக்கப்படும் என்று நேற்று (ஆக. 5) இந்தியாவிற்கு மீண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.