
தங்கள் ஆட்சியை முதல் நாடாக ரஷ்யா அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக, நேற்று (ஜூலை 3) ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஒரு `துணிச்சலான முடிவு’ என்று அந்நாட்டு அரசு கருத்து தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஷிர்னோவ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவில் கூறியதாவது,
`ரஷ்ய நாட்டின் தூதர் டிமிட்ரி ஷிர்னோவ், ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் முல்லா அமீர் கான் முத்தகியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தை அங்கீகரிப்பதற்கான ரஷ்ய அரசாங்கத்தின் முடிவை ரஷ்ய தூதர் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
இந்த முடிவின் முக்கியத்துவத்தை தூதர் எடுத்துரைத்தார். இது ஆப்கானிஸ்தானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வரலாற்று நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் வரலாற்றில், ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இது நினைவுகூரப்படும், மேலும் பிற நாடுகளின் இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு, இது ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்யாவின் சிறப்பு பிரதிநிதி ஸமீர் காபுலோவ், ரஷ்ய அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியிடம் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆப்கானிஸ்தான் நாட்டுத் தூதர்கள் இருந்தாலும், இதுவரை எந்தவொரு நாடும் தாலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.