
டொமினிகன் குடியரசு நாட்டில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் கூரை சரிந்து ஏற்பட்ட விபத்தில், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில், `ஜெட் செட்’ என்ற பெயரில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று அங்கு நடைபெறும் நடன நிகழ்ச்சி புகழ்பெற்றதாகும்.
வழங்கம்போல, நேற்றைக்கு முந்தைய நாள் (ஏப்ரல் 7) இரவு நடன நிகழ்ச்சி கேளிக்கை விடுதியில் நடைபெற்றுள்ளது. அப்போது எதிர்பாராவிதமாக, விடுதியின் மேற்கூரை சரிந்து விபத்து ஏற்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்பட்டபோது, கேளிக்கை விடுதியில் சுமார் 500 முதல் 1000 பேர் வரை இருந்ததாக உள்ளூர் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. மிகவும் குறிப்பாக ஒரு மாகாண ஆளுநர், புகழ்பெற்ற பாடகர், இரு முன்னாள் பேஸ்பால் வீரர்கள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரணையில் இறங்கவில்லை என்றும், அரசு நிர்வாகத்தின் முழு கவனமும் மீட்புப் பணிகள் மீது உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதியின் உரிமையாளார் ஆண்டோனியோ எஸ்பய்லாட், `இந்த நிகழ்வு ஏற்படுத்திய வலியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை… இந்த நிகழ்வு பலருக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.
கேளிக்கை விடுதி செயல்பட்ட கட்டடம், 50 வருடப் பழமையானது என்றும், முன்பு ஒரு காலத்தில் அங்கு திரையரங்கம் செயல்பட்டு வந்ததாகவும், சில வருடங்களுக்கு முன்பு அந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.