கன்சர்வேடிவ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்

மன்னர் சார்லஸைச் சந்தித்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.
கன்சர்வேடிவ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்
1 min read

பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, கட்சித் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

பிரிட்டன் தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதாக அறிவித்த ரிஷி சுனக், கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்து தெரிவித்து தோல்விக்குப் பொறுப்பேற்பதாகக் கூறினார்.

பிரதமர் அலுவலகத்தில் இறுதியாக உரையாற்றிய ரிஷி சுனக் கூறியதாவது:

"மன்னர் சார்லஸைச் சந்தித்து பிரதமர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்யவுள்ளேன். முதலில் அனைவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் பொறுப்பில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஆனால், பிரிட்டனில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்று தெளிவான சமிக்ஞையை நீங்கள் அனுப்பியுள்ளீர்கள். உங்களுடையத் தீர்ப்புதான் முக்கியம். உங்களுடையக் கோபமும், ஏமாற்றமும் எனக்குப் புரிகிறது. இந்தத் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

அயராது கடுமையாக உழைத்த கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய உழைப்புக்கு வெற்றி கிடைக்கவில்லை. உங்களுடைய உழைப்புக்கு எங்களால் நியாயம் சேர்க்க முடியவில்லை.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன். உடனடியாக விலகவில்லை. முறையாகப் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வரை மட்டுமே இந்தப் பதவியில் தொடர்வேன்" என்றார்.

இதைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸைச் சந்தித்த ரிஷி சுனக் முறைப்படி பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in