
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் அவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது குடியரசு கட்சி.
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் இரு அவைகள் உள்ளன. இந்த இரு அவைகளும் அமெரிக்கா முழுமைக்குமான சட்டமியற்றும் அதிகாரம் பெற்றவை. இவற்றில், மேல் அவை செனட் சபை (Senate) எனவும், கீழ் அவை உறுப்பினர்கள் சபை (House of Representatives) எனவும் அழைக்கப்படுகிறது.
செனட் சபையில் 100 உறுப்பினர்கள் இடங்களும், உறுப்பினர்கள் சபையில் 435 உறுப்பினர்கள் இடங்களும் உள்ளன. இந்த இரு அவைகளில் காலியாக உள்ள இடங்களுக்குப் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு அதிபர் தேர்தலுடன் சேர்த்து நடைபெற்றன.
இந்நிலையில், இரு அவைகளின் காலி இடங்களுக்கான தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை, இந்திய நேரப்படி இன்று ( நவ.6) காலை தொடங்கியது. இதன் அடிப்படையில், மாலை 6 மணி நிலவரப்படி மேல் அவையான செனட்டில் குடியரசுக் கட்சியின் இடங்கள் 52 ஆக உயர்ந்தன. அதேநேரம், ஜனநாயகக் கட்சிக்கான இடங்கள் 42 ஆக குறைந்தன.
செனட் அவையில் 51 இடங்களைப் பெறும் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்பதால், 52 இடங்களுடன் செனட்டில் வலுவான நிலையில் உள்ளது குடியரசு கட்சி.
இந்த தேர்தலுக்கு முன்பு, செனட்டில் குடியரசுக் கட்சிக்கு 49 உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்களும் இருந்தனர். 4 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் செனட் அவையை கட்டுப்படுத்தியது ஆளும் ஜனநாயகக் கட்சி.