
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை, என இரண்டிலும் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது குடியரசுக் கட்சி.
சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று, 2-வது முறையாக அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20-ல் பதவியேற்கவுள்ளார் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப். அதிபர் தேர்தலுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளது குடியரசுக் கட்சி.
அமெரிக்க நாடாளுமன்றம் காங்கிரஸ் என அழைக்கப்படுகிறது. இதன் மேலவை செனட் சபை எனவும், கீழவை பிரதிநிதிகள் சபை எனவும் அழைக்கப்படுகிறது. பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களுக்கு 2 வருடங்கள் மட்டுமே பதவிக்காலமாகும், அதே நேரம் செனட் சபையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை முடிவுக்கு வரும்.
இதன் அடிப்படையில் அமெரிக்க அதிபர் தேர்தலுடன் சேர்த்து, செனட் சபையின் 33 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தல் மற்றும் செனட் சபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஆனால் பிரதிநிதிகள் சபையின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்றைய (நவ.15) நிலவரப்படி செனட் சபையில் உள்ள 100 இடங்களில், 53 இடங்கள் குடியரசுக் கட்சியின் வசமாகியுள்ளன. அதே நேரம் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு தேவையான 218 இடங்களைக் கைப்பற்றியுள்ளது குடியரசுக் கட்சி. முழுமையான முடிவுகள் தெரிய சில நாட்கள் ஆகலாம்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குடியரசுக் கட்சியின் வசம் சென்றுள்ளதால், அதன் மூலம் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டபடி அந்நாட்டு அரசு நிர்வாகத்தில் தேவைப்பட்ட சீர்திருத்தங்களையும், புதிய சட்டங்களையும் அமல்படுத்த குடியரசுக் கட்சியால் முடியும்.