
கோவிட் பெருந்தொற்று காலத்தில் மேற்கொண்ட உதவிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா நாட்டின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் வரும் நவம்பர் 16-ல் அந்நாட்டுச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி இரு நாடுகளின் உறவை பலப்படுத்துவது குறித்துப் பேசவுள்ளார். இதை அடுத்து தென் அமெரிக்காவின் பிரேசில், குயானா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.
இந்நிலையில், தென் அமெரிக்காவுக்கு அருகே அமைந்துள்ள தீவு நாடான டொமினிகா, அந்நாட்டின் மிக உயரிய `டொமினிகா அவார்டு ஆஃப் ஹானர்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் பிப்ரவரி 2021-ல் டொமினிகாவுக்கு சுமார் 70 ஆயிரம் டோஸ் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வழங்கியது இந்திய அரசு.
தடுப்பூசிகளை வழங்கி உதவியதற்காகவும், சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் டொமினிகா நாட்டிற்கு உதவி செய்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு இந்த உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டொமினிகாவின் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருதை அறிவித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 19 முதல் 21 வரை குயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் இந்தியா-கரிபியன் நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் வைத்து பிரதமர் மோடிக்கு `டொமினிகா அவார்டு ஆஃப் ஹானர்’ விருதை வழங்குகிறார் டொமினிகா அதிபர் சில்வானி பர்டன்.