
தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் எலான் மஸ்கின் ஆர்வம் குறித்து பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் கடைபிடிக்கும் மினிமலிசம் குறித்தும், விருந்தினர்களுக்கு அவரது இல்லத்தில் வழங்கப்படும் வசதிகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எலான் மஸ்கின் மினிமலிச வாழ்க்கை குறித்து 76 வயதான அவரது தாயார் மாயே மஸ்க் சமீபத்தில் டைம்ஸ் யூ.கே.வுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரது மகனிடம் உள்ள செல்வம் விருந்தினர்களுக்கான ஆடம்பரமான தங்குமிடங்களை உருவாக்கவில்லை என இந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் மயே மஸ்க். அவர் பேசியவை,
`டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதள மையத்துக்குச் செல்லும்போது நான் கார் நிறுத்துமிடத்தில் தங்குவேன். ராக்கெட் ஏவுதள மையத்துக்கு அருகே ஆடம்பர வீட்டை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நாங்கள் அனைவரும் எப்படி ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வருடம் வாழ்ந்தோம் என டோஸ்காவும் (எலான் மஸ்க் சகோதரி) நானும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தோம்’ என்றார்.
அதுபோல தன் மகனின் இல்லத்தில் தங்கும் அனுபவம் குறித்து கடந்த 2023-ல் தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டார் மயே மஸ்க். அதில், `மகனின் இல்லத்தின் தரையில் மெத்தைகள் அல்லது போர்வைகள் மீது தூங்குவதும், கார் நிறுத்தத்தில் தூங்குவதும் வாடிக்கையானது. சிறு வயதில் சிங்கங்கள் அல்லது ஹைனாக்கள் மத்தியில் கலஹாரி பாலைவனத்தில் நான் தங்கியதைவிட, இவ்வாறு தரையில் தூங்குவது மேலானது’ என்றார்.
2022-ல் டெட் டாக்ஸ் நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், `எனக்கு இப்போது எந்த வசிப்பிடமும் இல்லை. நண்பர்களின் இடங்களில் நான் தங்கியிருக்கிறேன்’ என்றார். சமீபத்தில் 50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 2 படுக்கை வசதிகள் கொண்ட இல்லத்துக்கு அவர் குடிபெயர்ந்துள்ளார்.