எக்ஸ் சமூக வலைதளத்திலிருந்து பிரபல செய்தி நிறுவனங்கள் விலகல்: பின்னணி என்ன?

எக்ஸ் சமூக வலைதளத்திலிருந்து பிரபல செய்தி நிறுவனங்கள் விலகல்: பின்னணி என்ன?

அமெரிக்க அரசு நிர்வாகத்தை மேம்படுத்த புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசு திறன்துறையின் தலைவராக எலான் மஸ்கை நியமிப்பதாக சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
Published on

தி கார்டியன் செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து, ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனமான லா வான்கார்டியாவும் எக்ஸ் சமூக வலைதளத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 200 வருடப் பழமையான செய்தி நிறுவனமான தி கார்டியன், இனிமேல் தன் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் எதுவும் பதிவிடப்போவதில்லை என கடந்த நவ.13-ல் அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பில், தீவிர வலதுசாரி கோட்பாடுகள், இனவெறியை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகள் உள்ளிட்டவை எக்ஸ் சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தப்படுவதாக கார்டியன் செய்தி நிறுவனம் குற்றம்சாட்டியது.

மேலும், எக்ஸ் ஒரு நச்சு ஊடக தளம் எனவும் அதன் உரிமையாளர் எலான் மஸ்க் எக்ஸின் செல்வாக்கை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவதாக நீண்ட காலமாக தாங்கள் கருதிவந்ததை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை இருந்ததாகவும், விளக்கம் அளித்திருந்தது தி கார்டியன்.

இந்நிலையில், தி கார்டியனை தொடர்ந்து, ஸ்பானிஷ் மொழியில் வெளியாகும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனமான லா வான்கார்டியாவும் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் விலகுவதாக அறிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் நச்சுக் கருத்துகள் அதிகமாகிவிட்டது எனவும், வதந்திகள், சதிக் கோட்பாடுகள் பரவும் இடமாக எக்ஸ் தளம் இருக்கிறது எனவும் குற்றம்சாட்டியது லா வான்கார்டியா.

மிகவும் குறிப்பாக, அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு அரசு நிர்வாகத்தை மேம்படுத்த புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசு திறன் துறையின் தலைவராக எலான் மஸ்கை நியமிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து இரு முன்னணி செய்தி நிறுவனங்கள் எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in