
அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் இன்று (மே 16) வருகை தந்தார்.
அண்மையில் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட மோதலில் ஈடுபட்ட விமானப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின்போது, துணைப் பிரதமர் இஷக் தார், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், ராணுவத் தளபதி அசீம் முனீர், விமானப்படைத் தளபதி ஸஹீர் அஹ்மத் பாபர் சித்து ஆகியோர் உடனிருந்தனர்.
அவர்கள் மத்தியில் பேசும்போது, `அமைதிக்காக நாங்கள் (இந்தியாவுடன்) பேசத் தயாராக இருக்கிறோம்’ என்று பிரதமர் ஷெபாஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம், அமைதிக்கான நிபந்தனைகளில், நீண்ட காலமாக நிலவிவரும் காஷ்மீர் பிரச்னையும் அடங்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.
நேற்று (மே 16) தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், `ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பாகிஸ்தானிடம் இருந்து அதை திரும்பப்பெறுவது குறித்து மட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருக்கிறோம்’ என்றார்.
மேலும், பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு, இருதரப்பு ரீதியாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.