
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரியை உயர்த்தி அமெரிக்க போரை விரும்பினால், இறுதிவரை போரிட சீனா தயார் என்று கருத்து தெரிவித்துள்ளது சீன வெளியுறவு அமைச்சகம்.
மருத்துவ சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் ஃபெண்டானில் என்கிற வஸ்து, போதைப் பொருளாகவும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது. போதைப் பொருட்களை அளவுக்கதிகமாக உட்கொண்டு அமெரிக்காவில் ஏற்படும் மரணங்களுக்கு முதன்மை காரணமாக உள்ளது ஃபெண்டானில்.
இந்நிலையில், ஃபெண்டானில் உற்பத்திக்கு காரணமான மூலப் பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யத் தடுப்பதில் இருந்து சீனா தவறிவிட்டதாகக் கூறி அண்மையில் குற்றம்சாட்டினார் அதிபர் டிரம்ப். இதன் தொடர்ச்சியாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார் டிரம்ப்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்கள் மீது வரியை உயர்த்தியது சீனா. இந்நிலையில், இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`ஃபெண்டானில் விவகாரத்தை அற்பமான சாக்காக முன்வைத்து சீனாவில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் மீது அமெரிக்கா வரியை உயர்த்தியுள்ளது. எனவே எங்களின் உரிமைகளையும், நலன்களையும் தற்காத்துக்கொள்ள இதற்கு பதிலடி கொடுப்பதே சரியான தீர்வாகும்.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஃபெண்டானில் பிரச்னைக்கு அமெரிக்கா மட்டுமே காரணமாகும். உண்மையிலேயே இந்த பிரச்னைக்குத் தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி, சீனாவுடன் ஆலோசனை நடத்தி அதன் மூலம் ஒருவரை ஒருவர் சமமாக நடத்துவது மட்டுமே.
ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி இறுதி வரை போராட நாங்கள் தயார்’ என்றார்.