
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் துருக்கியிலிருந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். ஈரான் அதிபர் பெசெஷ்கியான் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்றார். ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப். இதன்பிறகு, இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.
அப்போது இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பாகிஸ்தான் பிரதமர் வெளிப்படையாகப் பேசினார்.
"காஷ்மீர் பிரச்னை, தண்ணீர் பிரச்னை உள்பட அனைத்துப் பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம். வணிகம் மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்தும் பேசத் தயார். ஆனால், அவர்கள் சண்டையைத் தொடங்குபவர்களாக இருந்தால், சில நாள்களுக்கு முன்பு செய்ததைப்போல எங்களுடைய நிலப்பரப்பை நாங்கள் பாதுகாக்க நேரிடும்.
அமைதியைக் கோரும் எங்களுடைய விருப்பத்தை ஏற்றுக்கொண்டால், உண்மையில் நாங்கள் அமைதியைத்தான் விரும்புகிறோம் என்பதை மிகத் தீவிரமாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்துவோம்" என்றார் ஷெபாஸ் ஷரிஃப்.
கடந்த ஏப்ரல் 22-ல் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தார்கள். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்தது. மே 10 அன்று இரு நாடுகளும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன.
பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை என்றால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பயங்கரவாதப் பிரச்னைகள் குறித்து மட்டுமே இருக்கும் என்கிற நிலைப்பாட்டில் இந்தியா தெளிவாக உள்ளது.