45 உயிர்களைப் பறித்த தாக்குதல்: தவறை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்

"காஸாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் கிடையாது. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்" - ஐ.நா. பொதுச்செயலாளர்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெற்கு காஸா நகரான ராஃபாவில், பாலஸ்தீன மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இஸ்ரேலியப் படைகள் நடத்திய இந்த மிக மோசமான தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

ஹமாஸ் மீது போர் தொடுக்கத் தொடங்கியிலிருந்து உலக நாடுகளிடமிருந்து இஸ்ரேல் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இவையனைத்தையும் தாண்டி இடம்பெயர்ந்து வந்த பாலஸ்தீன மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு இரு மூத்த ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அருகிலிருந்து முகாமும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. முகாமிலிருந்த 45 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் கடுமையாகக் காயமடைந்துள்ளார்கள்.

இந்தப் படுகொலைக்கு ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குடாரெஸ் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "காஸாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் கிடையாது. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை உரையாற்றுகையில், "காஸாவுக்கு எதிரான போரில் பொதுமக்களைப் பாதுகாக்க முடிந்தளவுக்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பையும் உண்டாக்கக் கூடாது என்ற கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும், நேற்றிரவு வருத்தத்துக்குரிய துயரமான தவறு நேர்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இலக்கை அடையும் முன் போரை நிறுத்துவதற்கான எண்ணம் இல்லை" என்றார்." என்றார்.

இந்தத் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்ததன் மூலம், பாலஸ்தீனத்தில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியாவின் இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in