போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் விதித்த நிபந்தனைகள்!

போர் தொடங்கி 28 மாதங்கள் கடந்துள்ள நிலையில் உக்ரைன் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது
போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் விதித்த நிபந்தனைகள்!
ANI

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், உக்ரைனுக்கான உதவிகள் குறித்து ஜி-7 உச்சி மாநாட்டில் உலக நாடுகள் விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் நிபந்தனைகளை விதித்துள்ளார்.

`டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன், ஸாபோரிஸியா ஆகிய இந்த நான்கு உக்ரைன் பிரதேசங்களையும் முழுவதுமாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும், மேலும் மேற்குலக நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் சேரும் முயற்சியை உக்ரைன் கைவிடுவதாக அறிவிக்க வேண்டும். அப்படிச் செய்தால் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது’ என அறிவித்துள்ளார் புதின்.

இது குறித்துப் பேசியுள்ள உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, `புதின் நிபந்தனைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, கடந்த காலங்களிலும் இது போன்ற சலுகைகளைத் புதின் அளித்துள்ளார்’ என்றார்.

ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் ஜெலென்ஸ்கி, புதினின் தந்திரங்கள் அனைத்தும் நாஜி தலைவர் ஹிட்லரின் நடவடிக்கைகளை ஒத்து இருக்கின்றன என முன்பு தெரிவித்தார்.

`உக்ரைன் கூட்டாளிகள் மாயைகளிலிருந்து விடுபட்டு, ரஷ்யாவின் சலுகைகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். போரை நிறுத்துவதற்கு எந்த எண்ணமும் (புதினுக்கு) இல்லை, ஆனால் தொடர்ந்து போரை நடத்தும் எண்ணம் உள்ளது’ என ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் போடோல்யாக் தெரிவித்துள்ளார்.

`புதினின் நிபந்தனைகள் ரஷ்யாவின் தோல்வியைக் காட்டுகின்றன. போர் ஆரம்பித்துச் சில நாட்களிலேயே உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் கைப்பற்றி, சில நாட்களிலேயே உக்ரைன் முழுவதையும் ஆக்கிரமித்து விடலாம் என அவர் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இப்போது இறங்கி வருகிறார்’ எனச் சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கி 28 மாதங்கள் கடந்துள்ள நிலையில், உக்ரைன் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in