இஸ்ரேலுடனான மோதலில் ஈரானுக்கு உதவாதது ஏன்?: ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்

இன்று கிட்டத்தட்ட அது ரஷ்ய மொழி பேசும் ஒரு நாடாகும்.
இஸ்ரேலுடனான மோதலில் ஈரானுக்கு உதவாதது ஏன்?: ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
ANI
1 min read

ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்திய பிறகும், ஈரானுக்கு உதவி செய்வதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் ஒதுங்கியிருப்பது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் விளக்கமளித்துள்ளார்.

ரஷ்யாவும், ஈரானும் பல தசாப்தங்களாக நெருங்கிய அரசுரீதியிலான உறவுகளைக் கொண்டிருந்தாலும், ஏராளமான ரஷ்ய மொழி பேசும் மக்கள் இஸ்ரேலில் வசிப்பதால், இந்த மோதலில் நடுநிலை வகிக்க முயற்சிப்பதாக அதிபர் புதின் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின்போது பேசிய ​​புடின், `முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பைச் சேர்ந்த சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இஸ்ரேலில் வசிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இன்று கிட்டத்தட்ட அது ரஷ்ய மொழி பேசும் ஒரு நாடாகும். மேலும், ரஷ்யாவின் சமகால வரலாற்றில் சந்தேகத்திற்கு இடமின்றி இதை நாங்கள் எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்’ என்றார்.

நட்பு நாடுகளுடான ரஷ்யாவின் விசுவாசத்தை முன்வைத்து விமர்சகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த புதின், அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் ரஷ்யா நீண்ட காலமாக நட்புறவை பேணி வருகிறது என்றும், ரஷ்ய மக்கள்தொகையில் சுமார் 15 சதவீதத்தினர் இஸ்லாமியர்கள் என்றும் கூறினார்.

மேலும், 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில், ரஷ்யா பார்வையாளர் நாடாக இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

பல தசாப்தங்களாக மத்திய கிழக்கில் நுட்பமான ஒரு சமநிலை கொள்கையை ரஷ்யா பின்பற்றி வருகிறது. ஈரானுடன் வலுவான பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உறவுகளை வளர்த்துக்கொண்டாலும், இஸ்ரேலுடனும் நல்லுறவை ரஷ்யா பேணி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in