
ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழிக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஃபார்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் பங்களிப்பு இருப்பதை உறுதி செய்த டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேன்யாகுவுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதுவரை எந்தவொரு கூட்டணியும் செய்திராத வகையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு கூட்டணியாகச் செயல்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். இஸ்ரேலிய ராணுவம் செய்த அற்புதமான பணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் டிரம்ப் உரையாற்றினார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் இந்தத் தாக்குதல் குறித்து உரையாற்றியிருக்கிறார்.
"ஈரான் மீதான தாக்குதலின் தொடக்கத்திலேயே அந்நாட்டின் அணுசக்தி வசதிகள் அழிக்கப்படும் என நான் வாக்குறுதி அளித்தேன். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று முன்னதாக நான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பான ஒருங்கிணைப்பில் இஸ்ரேலியப் படைகள் மற்றும் அமெரிக்க ராணுவம் இடையிலான சிறப்பான ஒருங்கிணைப்பில் ஈரானில் ஃபார்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி முடித்துள்ளது. ஈரானின் அணுசக்தி வசதிகளைக் குறிவைத்த அமெரிக்காவின் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றியமைக்கும்" என்றார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு.
இஸ்ரேல், ஈரான் இடையிலான வான்வழித் தாக்குதல் கடந்த 13 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈரான் வசம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் இஸ்ரேல் குறியாக இருக்கிறது. இதனால், அணு ஆயுதங்கள் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் இதற்குப் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் 1979-ல் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேல் பங்களிப்புடன் ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்கா.