
அரசு முறைப் பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 15) சென்றார். லர்னாகா சர்வதேச விமானநிலையத்தில் வைத்து சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடௌலிட்ஸ் பிரதமரை வரவேற்றார். மேலும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சைப்ரஸ் அதிபர் மாளிகையில் வைத்து அந்நாட்டின் மிக உயரிய, `கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III’ விருது பிரதமர் மோடிக்கு இன்று (ஜூன் 16) வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சைப்ரஸ் நாட்டின் முதல் அதிபர் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த விருது, உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொள்வதாகக் கூறி, சைப்ரஸ் நாட்டின் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பொது மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிற்கும் சைப்ரஸுக்கும் இடையே நிலவும் நீண்டகால உறவுகளுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகப் பேசிய மோடி, அவை பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன், உலகளாவிய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை வழிநடத்தும் `உலகம் ஒரு குடும்பம்’ என்ற பழமையான தத்துவத்தை இந்த விருது அங்கீகரிப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.