இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.
கடந்த செப்.21-ல் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று முதல்முறையாக இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்றார் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்க. இதைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியாவை நியமித்த அதிபர் அநுர குமார, அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார்.
மேலும், இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் 14-ல் நடைபெறும் என அதிபர் மாளிகை அறிவித்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் இருந்தாலும், அதில் 196 இடங்களுக்கான எம்.பி.க்கள் மட்டுமே மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமிருக்கும் 29 எம்.பி.க்களுக்கான இடங்கள், கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்படும்.
இந்நிலையில், அதிபர் அநுர குமாரவின் ஜனதா விமுக்தி பெரமுனா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி, சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி ஆகியவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டன.
நாடு முழுவதும் நேற்று (நவ.15) அமைதியாக நடந்த வாக்குப்பதிவில் சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இன்று (நவ.15) காலை 11 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கையில் 123 இடங்களை வென்று ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெருன்பான்மை பெற்றுள்ளது இலங்கை அதிபர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 31 இடங்கள் கிடைத்துள்ளன.
கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்புக்கு 145 இடங்கள் கிடைத்தன. ஆனால் தற்போது 2 இடங்கள் மட்டுமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்குக் கிடைத்துள்ளது. தமிழர்களின் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 6 இடங்கள் கிடைந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.