இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபரின் கூட்டணி வரலாற்றுச் சாதனை!

அதிபரின் அதிகாரத்தைக் குறைக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபரின் கூட்டணி வரலாற்றுச் சாதனை!
1 min read

இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

கடந்த செப்.21-ல் இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற அநுர குமார திசாநாயக்க, செப்.24-ல் அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்தெடுக்க பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களில், 196 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும், அதே நேரம் தேர்தலில் கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில் எஞ்சிய 29 இடங்கள் கட்சிகளுக்குப் பிரித்து வழங்கப்படும். இந்நிலையில் கடந்த நவ.14-ல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் முடிவில் 69 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

196 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) கூட்டணிக்கு 61 சதவீத வாக்குகள் கிடைத்து, 141 இடங்களில் வெற்றி பெற்றது. வாக்குகள் அடிப்படையில் இந்தக் கூட்டணிக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டன. எனவே ஒட்டுமொத்தமாக இலங்கை அதிபரின் கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றியது.

இதன்மூலம் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது தேசிய மக்கள் சக்தி கூட்டணி. 1978-ல் இலங்கை அதிபருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதற்கு அப்போது பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதன்பிறகு அதிகாரத்துக்கு வந்த எந்த ஒரு ஆளும்கட்சியும் அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை.

இந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, இலங்கை அதிபருக்கான அதிகாரத்தைக் குறைப்பேன் என வாக்குறுதி அளித்தார் அதிபர் அநுர குமார திசாநாயக்க. அதிபரின் அதிகாரத்தைக் குறைக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். தற்போது ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) கூட்டணிக்கு இரண்டு பங்கு இடங்கள் கிடைத்ததால், அதிபரின் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பலரும் கவனித்து வருகின்றனர்.

இந்தத் தேர்தலில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 40 இடங்களும், முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 இடங்களும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுக்கு 3 இடங்களும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 8 இடங்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கு 3 இடங்களும் கிடைத்தன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in