
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாமாக அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் கட்டடத்தின் உள் அரங்கில் நேற்று (ஜன.20) நடந்த பதவியேற்பு விழாவில் அந்நாட்டின் 47-வது அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப். பதவியேற்ற கையோடு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் வைத்து பல்வேறு முக்கிய அரசு கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
அதில் ஒரு கோப்பு, அமெரிக்க குடியுரிமை தொடர்பானது. அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இந்த நடைமுறையால், குடியுரிமை இல்லாத அகதிகளுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுகிறது.
1861 முதல் 1865 வரை அமெரிக்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, கடந்த 1868-ல் மேற்கொள்ளப்பட்ட 14-வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் இந்த `பிறப்பால் குடியுரிமை’ விதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இது ஒழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க மக்களில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், பிறப்பால் ஒரு குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கவேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்று டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெறவேண்டும் என்றால், குழந்தைகளின் பெற்றோரில் ஒருவர், அமெரிக்க குடிமகனாக இருக்கவேண்டும் அல்லது நிரந்தர தங்கும் உரிமை (க்ரீன் கார்டு) பெற்றவராக இருக்கவேண்டும் அல்லது அமெரிக்க ராணுவப் படையில் பணிபுரிபவராக இருக்கவேண்டும்.