இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு திமோர் லெஸ்தே நாட்டின் மிக உயரிய விருதான, `கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர் லெஸ்தே’ வழங்கப்பட்டது
அரசு முறை சுற்றுப்பயணமாக திமோர் லெஸ்தே நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு நேற்று (ஆகஸ்ட் 10) அந்நாட்டின் மிக உயரிய விருதான `கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர் லெஸ்தே’ வழங்கப்பட்டது. பொது வாழ்வில் முர்மு புரிந்த சாதனைகளுக்காகவும், கல்வி, சமூக நலன், மகளிர் அதிகாரமளிப்பு போன்றவற்றில் அவரது அர்ப்பணிப்புக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் முர்மு, `இந்த கௌரவம் இந்தியாவுக்கும், திமோர் லெஸ்தேவுக்குமான நட்புறவின் வெளிப்பாடு’ என்று பேசினார்.
ஃபிஜி, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று திமோர் லெஸ்தே நாட்டுக்குச் சென்றார் குடியரசுத் தலைவர் முர்மு. விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து முர்முவை வரவேற்றார் அந்நாட்டு அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோர்த்தா. இதற்குப் பிறகு அந்நாட்டுத் தலைநகர் திலியில் உள்ள அதிபர் மாளிகையில் திரௌபதி முர்முவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அரசு முறை சுற்றுப்பயணமாக திமோர் லெஸ்தே நாட்டுக்குச் செல்லும் முதல் இந்தியத் தலைவர் திரெளபதி முர்மு ஆவார். அந்நாட்டு அதிபருடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார் முர்மு. மேலும் திலியில் வசிக்கும் இந்திய வம்சாவழி மக்களிடம் அவர் உரையாற்றினார்.
திமோர் லெஸ்தே அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோர்த்தா 1996-ல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளார். 2002-ல் இந்தோனோசியா நாட்டிலிருந்து தனி நாடாகப் பிரிந்தது திமோர் லெஸ்தி. இந்நாடு கிழக்கு திமோர் என்றும் அழைக்கப்படுகிறது.