போப் பிரான்சிஸ் காலமானார்!

கடந்த 2013-ல் போப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போப் பிரான்சிஸ் காலமானார்!
1 min read

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் இன்று (ஏப்.21) காலமானார்.

கடந்த 2013-ல் போப் 16-வது பெனடிக்ட் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய போப்பாக 76 வயதான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அன்றைய கார்டினல் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தென் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் என்ற பெருமையை அவர் பெற்றார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனின் நிர்வாகத்தை சீரமைத்தது, 4 முக்கிய கற்பித்தல் ஆவணங்களை எழுதியது, 65-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 47 நாடுகளுக்குச் சென்றது, 900-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ துறவிகளை உருவாக்கியது என 12 வருட பதவிக்காலத்தில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மூலம் அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

குறிப்பாக ,ஒரே பாலின தம்பதிகளுக்குத் திருமணம் நடத்திவைக்க கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு அனுமதி வழங்கியதோடு மட்டுமல்லாமல், வாடிகன் அலுவலகங்களில் பணியாற்ற முதல்முறையாக பெண்களை நியமித்தார்.

நிமோனியா பாதிப்பால் கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 30 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த பிரான்ஸில், கடந்த மாதம் வீடு திரும்பினார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வில் இருந்தவர், கடைசியாக ஈஸ்டர் திருநாளை ஒட்டி புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் பொதுமக்களை நேற்று (ஏப்.20) சந்தித்து ஆசி வழங்கினார்.

இந்நிலையில், இன்று காலை 7.35 மணி அளவில் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் 88 வயதான போப் பிரான்சிஸ் காலமானதாக கார்டினல் கெவின் ஃபாரெல் செய்தி வெளியிட்டார்.

logo
Kizhakku News
kizhakkunews.in