2022 பொருளாதாரப் பிரச்னைக்கு பிறகான முதல் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இலங்கையில் இன்று (செப்.21) நடைபெற்று வருகிறது.
இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதில் 40 லட்சம் தமிழ் வாக்காளர்கள் உள்ளிட்ட 1 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவுபெற்றதும், வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இதை அடுத்து நள்ளிரவில் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டு, நாளை காலை தேர்தல் முடிவுகள் வெளியாகும். இந்த அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், 75 வயதான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மார்க்ஸிய சிந்தாந்தத்தைக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்க, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியும், மலையக மக்கள் முன்னணியும் ஆதரவளித்துள்ளன.
2022 பொருளாதாரப் பிரச்னையை ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான இலங்கை அரசு முறையாகக் கையாண்டிருந்தாலும், தற்போது இருக்கும் பண வீக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அதிக அரசு வரிவிகிதங்கள் போன்ற பிரச்னைகள் அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.