இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் தலைநகர் கீவ் நகரை இன்று (ஆகஸ்ட் 23) சென்றடைந்தார்.
அரசுமுறை பயணமாக கடந்த ஆகஸ்ட் 21 தொடங்கி, இரு நாட்களாக போலந்து நாட்டில் இருந்தார் மோடி. பிறகு நேற்று போலந்து தலைநகர் வார்ஷாவில் இருந்து `ரயில் ஃபோர்ஸ் ஒன்’ என்று அழைக்கப்படும் போலந்தின் சொகுசு ரயிலில் கிளம்பிய மோடி, 10 மணி நேரம் பயணித்து உக்ரைன் தலைநகர் கீவ் நகரைச் சென்றடைந்தார்.
கீவ் ரயில் நிலையத்தில் மோடியை வரவேற்ற உக்ரைன் அரசு அதிகாரிகள், அங்கிருந்து அவரை ஹயாத் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். ஹயாத் ஹோட்டலில் இந்திய வம்சாவழி மக்கள் மோடிக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
8 மணி நேரம் கீவ் நகரில் இருக்கும் பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தப் பேச்சுவார்த்தையில் நடந்துவரும் ரஷ்ய-உக்ரைன் போர் குறித்து அதிபர் ஜெலென்ஸ்கியுடன் விவாதிக்க உள்ளார் மோடி.
`யுத்த களத்தில் எந்த ஒரு பிரச்னையையும் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலை நாட்ட இந்தியா முழு ஆதரவளிக்கிறது’ என்று ரஷ்ய-உக்ரைன் போர் குறித்து நேற்று போலந்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் தெரிவித்தார் மோடி.
கடந்த பிப்ரவரி 2022-ல் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியது ரஷ்யா. போர் தொடங்கியதும் உக்ரைனில் இருந்த இந்திய மாணவர்களும், பிற இந்தியர்களும் உடனடியாக இந்திய அரசால் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து 31 மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே முழு வீச்சில் போர் நடந்து வருகிறது.
1991-ல் அன்றைய சோவித் யூனியனில் இருந்து பிரிந்து தனி நாடானது உக்ரைன். இந்தப் பயணத்தால் உக்ரைன் நாடு உருவான இந்த 34 வருடங்களில் அங்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் நரேந்திர மோடி.