
அதிபர் டிரம்புடன் இணைந்து அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடியிடம், தொழிலதிபர் கௌதம் அதானி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பது கிடையாது என்று அவர் பதிலளித்துள்ளார்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, இரு நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று (பிப்.13) அமெரிக்காவைச் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட்டை முதலில் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து, இரு தரப்பு அரசு உயரதிகாரிகள் சகிதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் மோடி. அதன்பிறகு இரு தலைவர்களும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.
அப்போது, `ஆசியாவின் பணக்கார மனிதர்களில் ஒருவரும், பிரதமர் மோடியின் கூட்டாளியாக கருதப்படுபவரான கௌதம் அதானி மீதான வழக்கு குறித்து நீங்கள் இருவரும் விவாதித்தீர்களா? அந்த வழக்கில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிபர் டிரம்பிடம் நீங்கள் கேள்வி எழுப்பினீர்களா பிரதமர் மோடி?’ என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மோடி, `இந்தியா ஒரு ஜனநாயக நாடு, வசுதைவ குடும்பகம் எங்கள் கலாச்சாரம், ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே குடும்பமாக நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியரையும் என் சொந்தம் என்று நான் நம்புகிறேன். மேலும் இதைப் போன்ற தனிப்பட்ட விவகாரங்கள் என்று வரும்போது, இரு நாட்டுத் தலைவர்களும் இது குறித்து விவாதிப்பது கிடையாது. தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் ஆலோசிப்பது கிடையாது’ என்றார்.
கடந்தாண்டு நவம்பரில், தொழிலதிபர் கௌதம் அதானி, அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர் சாகர் அதானி, முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 நபர்கள் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான வழக்குகளை அயலக லஞ்சம் நடைமுறைகள் சட்டத்தின் கீழ் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் ஃபெடரல் நீதிமன்றத்தில், அமெரிக்க நீதித்துறை தொடர்ந்தது.
2020-2024 காலகட்டத்தில், அதிக விலைக்கு சூரிய ஒளி மின்சாரம் வாங்கும் வகையிலான விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக சில மாநில அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ. 2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் ரூ. 25,000 கோடி முதலீடு பெற்றதாகவும் அந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.