
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வரும் ஆகஸ்ட் மாதம் உக்ரைன் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யப் போர் தொடங்கிய பின்பு முதன்முறையாக அந்நாட்டுக்குப் பயணிக்கிறார் மோடி.
கடந்த ஜூன் 13 முதல் 15 வரை இத்தாலியில் நடந்த 50-வது ஜி-7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. அப்போது உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை அவர் சந்தித்துப் பேசினார்.
`அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து உரையாடினேன். உக்ரைனுடனான உறவுகளை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா ஆர்வத்துடன் உள்ளது. பிரச்சனையை (ரஷ்யா-உக்ரைன் போர்) பேச்சுவார்த்தை வழியாக முடிவுக்குக் கொண்டு வர முடியும் என இந்தியா நம்புகிறது’ என்று இந்த சந்திப்பு குறித்து தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் மோடி.
இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 8-ல் அரசு முறைப் பயணமாக ரஷ்யா சென்ற மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்டில் விருதை அளித்தார் அதிபர் புதின்.
மோடியின் இந்தப் பயணம் குறித்து, `உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் உலகின் ரத்தம் தோய்ந்த குற்றவாளியைக் கட்டிப்பிடித்ததைப் பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டார் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி உக்ரைன் செல்லவிருப்பதாக வெளியான தகவல் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.