பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் திரும்புவதற்கு இந்தியா தன் ஆதரவை வழங்கும் என்று பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
3 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ஐநா பொதுசபையின், `வருங்காலத்தின் உச்சிமாநாட்டில்’ (summit of the future) பங்கேற்றார். அந்த நிகழ்வின்போது பாலஸ்தீனத்தின் அதிபர் மஹ்மூத் அப்பாஸை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி.
இந்த சந்திப்பு தொடர்பாக தன் எக்ஸ் வலைதள கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, `நியூயார்க்கில் அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தேன். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவைத் தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுடனான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்த கருத்துகளை பரிமாறினேன்’ என்றார்.
பாலஸ்தீனத்தின் அதிபருடனான பிரதமர் மோடியின் சந்திப்பு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `காஸாவில் நிலவிவரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலவரம் குறித்த தன் ஆழ்ந்த கவலையை பிரதமர் வெளிப்படுத்தினார். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உட்பட இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
போர் நிறுத்தம், பிணையக் கைதிகள் விடுவிப்பு போன்றவற்றை மேற்கொண்டு, அதன் பிறகு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தினார் பிரதமர். மேலும் இரு நாடுகள் தீர்வு மட்டுமே பிரந்தியத்தில் அமைதி நிலவுவதற்கு வழிவகை செய்யும் என்பதையும் வலியுறுத்தினார். ஐநா சபையின் உறுப்பு நாடு அந்தஸ்தை பாலஸ்தீன் பெறுவதற்கு தொடர்ந்து இந்தியா ஆதரவளிக்கும் என்பதைப் பிரதமர் தெரிவித்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.